
Sunday, January 31, 2010
கெளதம் மேனனின் 'ஓமணப் பெண்ணே...'

விண்ணைத்தாண்டி வருவாயா ஆடியோ வெளியாகி விட்டது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக ஓமணப்பெண்ணே என்ற மலையாளம் கம் தமிழ் கலந்த பாடல் ரசிகர்களை வசீகரிக்கத் தொடங்கியுள்ளது.
கெளதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, திரிஷா இணை சேர்ந்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. இப்படத்தின் மூலம் ரஹ்மானுடன் முதல் முறையாக கெளதம் மேனன் இணைந்துள்ளார்.
சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் கேசட்டை வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
நீண்ட பேச்சுக்கள் இல்லாமல், சுருக்கமாக இருந்தது இந்த விழா. படத்தின் பாடல்களைப் பாடியுள்ள சின்மயி, கார்த்திக், தேவன், விஜயப்பிரகாஷ், பிளேஸ், அல்போன்ஸ், நரேஷ் ஐயர், பென்னி தயாள் ஆகியோர் தங்களது பாடல்களை மேடையில் பாடினர்.
பின்னர் பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. இதுவரை பார்த்திராத அழகுடன் சிம்பு படு ஹேன்ட்சம் ஆக காட்சியளித்துள்ளார் அத்தனை பாடல்களிலும். திரிஷாவின் அழகும் மயக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதை கெளதம் மேனனின் சொந்தக் காதல் கதை என்று ஒரு பேச்சு உள்ளது.
படத்தின் பாடல்களில் ஓமணப் பெண்ணே பாடல் அனைவரையும் வசீகரித்தது. ரசிகர்களிடமும் இந்தப் பாடல் ஹிட் ஆகி வருகிறதாம்.
இந்தப் பாடல் கடைசியாகத்தான் சேர்க்கப்பட்டதாம். ரஹ்மான்தான் ஒரு மலையாளப் பாட்டை படத்தில் சேர்க்க முடியுமா என்று கேட்டாராம் கெளதமிடம். மேனனும் உடனே சரியென்றாராம். இதையடுத்து மலையாளத்தில் வெளியான ஹிட் பாடல் ஒன்றை கவிஞர் தாமரையிடம் ரஹ்மான் போட்டுக் காட்டியுள்ளார். பின்னர் அதன் சாயலில் ஓமணப் பெண்ணே பாட்டை எழுதிக் கொடுத்துள்ளார் தாமரை.
இதையடுத்து அந்தப் பாட்டையும், மலையாள ஒரிஜினல் பாட்டையும் கலந்து இந்த ஹிட் பாட்டை உருவாக்கினாராம் ரஹ்மான்.
கோவா- பட விமர்சனம்

இது என்ன மாதிரி படம்... படம்தானா அல்லது இவர்கள் கோவாவில் குடித்துவிட்டு கூத்தடித்த கண்றாவியை நாம் காசு கொடுத்து பார்க்க வேண்டும் என்று வெங்கட் பிரபு-பிரேம்ஜி- ஜெய் கூட்டணி சொல்ல வருகிறார்களா...
இந்தக் கருமத்தைக் காட்டத்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தார்களா?
ஏன் இப்படி பொங்கறீங்க? என்று நீங்கள் கேட்பது புரிகிறது... மனம் வெதும்பி திட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் காசு கொடுத்து இந்தப் படத்தைப் பாருங்கள்...
ரொம்ப சின்ன கதை... அல்லது கோவா போக சின்னதாக ஒரு காரணம் இந்தக் கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
மதுரைக்குப் பக்கத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் உதவாக்கரைகளாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரேம்ஜி அண்ட் கோ, தங்கள் கட்டுப்பாடு மிக்க கிராமத்திலிருந்து ஒரு வாரம் 'எஸ்' ஆக விரும்புகிறார்கள். மதுரைக்குப் போகும் அவர்களுக்கு பழைய நண்பனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அவனோ, கோவாவில் டூரிஸ்டாக வேலை பார்த்து, அப்படியே ஒரு பாரின் ஃபிகரை உஷார் பண்ணி திருமணம் செய்து லண்டனில் செட்டிலாகப் போகும் தன் கதையை விலாவாரியாகச் சொல்ல, இதுதாண்டா சரியான ரூட்டு என்ற முடிவுக்கு வருகிறார்கள் பிரேம்ஜி அண்ட் கோ.
கோவாவுக்குப் போகிறார்கள். பெண்களை மடக்குவதில் பிஎச்டியே பண்ணுமளவு சுற்றுகிறார்கள். இந்த கும்பலில் ஹோமோவாக திரியும் சம்பத்-அரவிந்த் ஆகாஷ் மற்றும் ஸ்னேகாவின் கிளைக்கதைகள் வேறு...
தங்களது 'உன்னத லட்சிய'த்தை இந்த கூட்டம் எப்படி அடைந்தது என்பது மீதிக் கதை.
முதல் அரை மணிநேரம் கிராமிய இசையும், கல கல காட்சிகளுமா... 'அட, வெங்கட் பிரபுவுக்கு ஹாட்ரிக் போல இருக்கே' என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்த நிமிடமே, அந்த இமேஜ் குமிழ் டப்பென்று வெடித்துச் சிதறுகிறது.
கோவா என்றால் பீச், அரை அல்லது முக்கால் நிர்வாணத்தில் பெண்கள், மூக்கு முட்ட குடிப்பது, பெண்களைக் கரெக்ட் பண்ணுவது, ஓரினச் சேர்க்கை வாழ்க்கை முறை... இதுதான் வெங்கட் பிரபுவுக்கு நினைவுக்கு வந்திருக்கிறது.
'அடுத்த கட்ட சினிமா' என்பதை ஆணும் ஆணும் கொள்ளும் உறவைக் காட்டுவதுதான் என்று தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ வெங்கட் பிரபு?.
இந்த சமூகம் ஏற்கெனவே கலாச்சார அழிவின் விளிம்பில்தான் நிற்கிறது. அந்த விளிம்பிலிருந்து அதலபாதாளத்துக்கு தள்ளிவிடும் முயற்சிகளை ஜஸ்ட் லைக் தட் செய்துவரும் கூட்டத்தில் வெங்கட் பிரபுவும்- சௌந்தர்யாவும் சேருவார்கள் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.
எந்தவித முன் யோசனையும் இல்லாமல், மனம் போன போக்கில் எடுத்துத் தள்ளிவிட்டு அதை அடுத்த கட்ட சினிமா அல்லது பொழுதுபோக்கு ரசனையின் மாறுபட்ட பரிமாணம் என்று சொல்லிக் கொள்வது மகா அருவருப்பையே தருகிறது.
பிரேம்ஜி அமரன்தான் படத்தின் நாயகன். மற்றவர்கள் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்தான். என்ன கொடுமை இது? என்ற பி. வாசுவின் வசனத்தை இன்னும் எத்தனை படத்தில் ஜவ்வாக இழுக்கப் போகிறாரோ பிரேம்ஜி...
பழைய ஹிட் பாடல்களை எப்போதோ ஒருமுறை உபயோகித்தால் சிலிர்க்கும்... அடிக்கடி அதே டெக்னிக்கை பயன்படுத்தினால் சலிக்கும். இது எப்போது வெங்கட் பிரபுவுக்கு புரியப் போகிறதோ?.
ஸ்னேகாவா இது... நம்ப முடியவில்லை. அவ்வளவு மோசமாக சித்தரிப்பு.. உருவமும் சரி, நடிப்பும் சரி!
பியா என்ற பெண்ணுக்கு இந்தப் படத்தில் நடிக்கும் வேலை இல்லை.
ஒரு காட்சி கூட நன்றாக இல்லையா என்ற கேள்வி எழலாம்... இருக்கின்றன.. ஆனால் அவை சாக்கடையில் கிடக்கும் நெல்லிக்கனிகளைப் போல!
யுவன் சங்கர் ராஜாவின் இசை பரவாயில்லை. குறிப்பாக கோவா தீம் மியூசிக். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு பாடல்கள் இல்லை.
சென்னை 28 ஓகே... சரோஜா பரவாயில்லை... கோவா கேவலம்... 'நல்ல' கேரியர் கிராஃப் வெங்கட்!
வாரிசுகள் எ(கெ)டுத்த இந்தப் படத்தால் சூப்பர் ஸ்டாருக்கும் சரி, பண்ணைப்புரத்து இசைக் குடும்பத்துக்கும் சரி... நல்ல பெயர் கிடைக்காது!
Friday, January 29, 2010
கோவாவுக்காக தள்ளிப் போன அசல்!

அஜீத் நடித்துள்ள அசல் படம் வரும் பிப்ரவரி 12ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜீத்- பாவனா- சமீரா ரெட்டி நடிக்க, சரண் இயக்கியுள்ள அசல் முதலில் பிப்ரவரி 5ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் உலகமெங்கும் 600க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் இந்தப் படம் வெளியாவதால் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. கூடுதல் பிரிண்டுகள் மற்றும் ரிலீஸ் ஏற்பாடுகளை சரியாகத் திட்டமிடவே இந்த தள்ளிப் போடல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள் தரப்பில்.
இதைவிட இன்னொரு முக்கிய காரணம் கோவா பட வெளியீடுதானாம். "அண்ணன் ரஜினியோட மகள் சௌந்தர்யா ரஜினி தயாரித்துள்ள முதல் படம் கோவா. அந்தப் படம் வெளியாகி சிறப்பா ஓடணும். அதுக்காக இன்னும் ஒரு வாரம் எங்க படத்தை தள்ளிப் போடவும் நாங்க தயார்" என்று கூறியுள்ளனர் ராம்குமாரும் பிரபுவும்.
அஜீத்துக்கும் அதே எண்ணம்தானாம். 'கோவா ரிலீசாகி இரண்டு வாரம் கழிச்சி நம்ம படத்தை விடலாம்', என்று கூறிவிட்டாராம்.
அசலுக்கு 'இணை இயக்குநர்'----------அஜீத்


பொதுவாக பெரிய ஹீரோக்கள், தங்களது படங்களின் தலைப்பு முதல் 'தி எண்ட்' கார்டு போடுவது வரை சகலமும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். 'எல்லாம் டைரக்டர்தாங்க' என்று பம்முவார்கள்.
ஆனால் அஜீத், தைரியமாக ஒரு காரியம் செய்துள்ளார்... வெற்றியோ தோல்வியோ அதில் தனது பங்களிப்பு என்ன என்பதும் தெரியட்டுமே என்ற எண்ணத்தில், அசல் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களில் ஒருவராக தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளார்.
இந்தப் படத்தின் கதை- திரைக்கதை- வசனம் என்று மூன்று பேர் பெயர்கள் இடம் பெறுகின்றன. அதில் ஒன்று அஜீத்துடைய பெயர். மற்ற இருவர் சரண் மற்றும் யூகி சேது.
படத்தின் இணை இயக்கமும் அஜீத் குமார்தான். இதனை படத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ விளம்பரங்களிலும் போட்டுள்ளனர்.
அஜீத் குமாரின் 49-வது படம் அசல். சமீரா ரெட்டி, பாவனா நாயகிகளாக நடித்துள்ளனர். சரண் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இரட்டை வேடமேற்றுள்ளார் அஜீத்.
இந்தப் படத்தின் சென்சார் காட்சி நேற்று நடந்தது. படம் பார்த்த தணிக்கைக் குழுவினர், 'சில ஆக்ஷன் காட்சிகளை நீக்கினால் க்ளீன் யு கொடுத்துவிடலாம், இல்லாவிட்டால் யு/ஏதான்' என சரணிடம் தெரிவிக்க, 'எந்தக் காட்சியையும் வெட்ட வேண்டாம்... அப்படியே யு /ஏ கொடுங்கள்' என்று கூறிவிட்டாராம்.
இப்போது யு/ஏ சான்றிதழுடன் அரங்குகளுக்கு வருகிறது அசல்.
ஆரம்பத்தில் இந்தப் படம் பிப்ரவரி 12ல் வெளியாகும் என அறிவித்திருந்த தயாரிப்பாளர் ராம்குமார், இப்போது ஒருவாரம் முன்னதாகவே பிப்ரவரி 5ம் தேதி அசலை வெளியிடுகிறார்.
Thursday, January 28, 2010
உதயநிதியிடம் விண்ணைத்தாண்டி வருவாயா...!

கவுதம் வாசுதேவ மேனன் தயாரித்து இயக்கி வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கேரளாவின் மிக அழகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஒரு இயல்பான காதல் கதை ஆகும்.
சிம்பு-த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. ஏஆர் ரஹ்மானின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட் ஆகியுள்ளதால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த சூழலில் இந்தப் படத்தின் இந்திய திரையிடல் உரிமைகளை முழுமையாக வாங்கியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ். இதற்காக மிகப் பெரிய தொகை கைமாறியிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வரும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகவுள்ள விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வியாபார 'டாக்' சாதகமாக இருப்பதாலேயே இந்தப் படத்தை பெரும் விலைக்கு வாங்கினாராம் உதயநிதி.
கவுதம் மேனன் ஏற்கெனவே வாரணம் ஆயிரம் படத்தை தயாரித்து இயக்கினார். அந்தப் படத்தை கடைசி நேரத்தில் முக அழகிரியின் மகன் தயாநிதிக்கு பெரும் விலைக்கு விற்றார்.
Subscribe to:
Posts (Atom)

